தமிழ்ப் பெண்களின் மனதை சிம்புவின் பீப் பாடல் நெருடியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவரது தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வாயிலாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
வானொலி, தொலைக்காட்சி, மேடை போன்ற பொது வழிகளில் இப்பாடலை சிம்பு பாடவில்லை. தனிப்பட்ட அறையில் தனி அறையில் பாடிய பாடல்.
அந்தப் பாடலை யாரோ திருடி இணையத்தில் பதிவிறக்கம் செய்து விட்டார்கள்.
சிம்புவுக்கு மக்களிடையே கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் சிம்புதான் வெளியிட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை.
சிம்பு மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்ட சதி இது.
இதை சதியென்று சொல்லுவதா? விதி என்று சொல்லுவதா? கூடா நட்பு இருந்து விட்டாலே இது மாதிரி பிரச்சினை வரும்.
இத்தனை வருட பயணத்தில் தமிழ் மரபை விட்டு விலகி செல்லாதவன் நான் (டி.ராஜேந்தர்). பெண்களுக்காகவே படங்கள் எடுத்திருக்கிறேன்.
பெண் சமுதாயத்தால்தான் முன்னேறியிருக்கிறேன். சிம்புவும் அது மாதிரிதான். எந்த பெண்ணையும் புண்படுத்தும் எண்ணம் சிம்புவுக்கு கிடையாது.
சிம்புவின் பீப் பாடலில் நல்ல கருத்துகளும் இருக்கின்றன.
அதையெல்லாம் விட்டு விட்டு மூடப்பட்ட வார்த்தையை தேடிப் பிடித்து சிம்புவை சிக்க வைத்து விட்டார்கள்.
அந்தப் பாடல் என் தமிழ்ப் பெண்களின் மனதை நெருடியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
அவருக்கு தொந்தரவு செய்வதற்காகவே ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். சிம்புவை காயப்படுத்துவதற்காகவே இந்த வலை பின்னப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் இறைவன் விரைவில் பதில் தருவார் என்றார் டி.ராஜேந்தர்.
0 comments:
Post a Comment