நைஜீரிய இராணுவம் வடக்கு நகரான சாரியாவில் மேற்கொண்ட நியாயப்படுத்த முடியாத தாக்குதல் ஒன்றில் சுமார் 300 ஷியா முஸ்லிம்களை கொன்று அவசரமாக புதைத்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் இம்மாத ஆரம்பத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த சடலங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனுமதி இன்றி அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. எனினும் இராணுவம் எவரையும் கொல்லவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரெகேடியர் ஜெனரல் ராப் அபூபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை சம்பவம் சர்வதேச அளவில் ஷிய முஸ்லிம்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதோடு ஷியா முஸ்லிகளை பாதுகாக்குமாறு நைஜீரிய அரசுக்கு ஈரான் அழுத்தம் கொடுத்திருந்தது.
எனினும் இந்த கொலைகள் குறித்து இராணுவ தரப்பின் கருத்தை நிராகரிக்கும் மனித உரிமை கண்காணிப்பகம் சுதந்திரமான நீதி விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
எனினும் ஈரான் ஆதரவு தரப்பினர் இராணுவத் தளபதி ஜெனரல் துகுர் புரதாயை படுகொலை செய்ய முயன்றதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டுகிறது. ஷியா ஆர்ப்பாட்டக்காரர்கள் கம்பு, பொல்லுகளுடன் இருப்பதும் ஒருசிலர் கல்லெறிவதை போன்ற படங்களை இராணுவம் வெளியிட்டிருந்தது.
இதில் கொல்லப்பட்டிருப்போரது சரியான எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாத போதும் மருத்துவ தரப்பினர் மற்றும் சாட்சியங்களிடம் இருந்து பெற்ற தகவல் அடிப்படையிலேயே மனித உரிமை கண்காணிப்பகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவுடைய நைஜீரிய இஸ்லாமிய முன்னணி என்ற அமைப்புக்கு எதிராகவே இராணுவம் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மற்றொரு போராட்டக் குழுவை ஏற்படுத்த காரணமாகிவிடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே நைஜீரியாவில் சுன்னி இஸ்லாமியவாத குழுவான பொகோ ஹராம் அமைப்பு மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment