தனியார் துறையினருக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்துக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2016 வரவுசெலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இணங்க தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு குறித்து தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் தொடர்பில் அனுமதியினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பதிலமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் சேவையாளர்களின் ஆகக் குறைந்தவேதன தொகை தொடர்பில் சட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேற்படி சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது
2016 வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்பட்டதோடு அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்திலும் தனியார் துறை சம்பள உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தனியார் நிறுவனங்களே 500 ரூபா முதல் 1500 ரூபா வரை அதிகரித்திருந்தன.
இந்த நிலையில் தனியார் துறைக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதை கட்டாயமாக்குவதற்காக சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இது தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாக தொழில் அமைச்சு தெரிவித்தது.
தனியார் துறை சம்பளம் இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளதோடு முதற்கட்டமாக 1500 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 1000 ரூபாவும் வழங்கப்பட உள்ளது.
0 comments:
Post a Comment