முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸும் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராவதாகவே தெரிகிறது. கட்சியின் மாநாட்டை பாரியளவில் நடத்தி கொழும்பிலிருந்து வரும் முக்கிய அரச தலைவர்களுக்கு பிரதேச செல்வாக்கை காண்பிப்பதே இதன் நோக்கமாகும். தேசிய காங்கிரஸின் மாநாட்டை அக்கட்சியின் பிறப்பிடமான அக்கரைப்பற்றில் நடத்துவதா அல்லது அயற் கிராமமான அட்டாளைச்சேனையில் நடத்துவதா என்பதில் இன்னும் முடிவில்லை போலுள்ளது.
எப்படியாயினும் இம்மாதம் 27ம் திகதிக்குள் மாநாட்டை நடத்துவதென்பதில் தேசிய காங்கிரஸ் தலைமை தெளிவாகவுள்ளது. தேசிய காங்கிரஸை பொறுத்தவரை அக்கரைப்பற்று மாநகர சபை, பிரதேச சபை ஆகிய இரண்டுமே அதன் கோட்டைகளாகும்.
கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை ஆகியோரே பெயர் சொல்லுமளவுக்கு பிரதானமானவர்களாவர். இக்கட்சியின் இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸை விட்டும் தூரமாகவுள்ளனர்.
நிந்தவூரைச் சேர்ந்த ஆரிப்சம்சுடீன் முஸ்லிம் காங்கிங்கிரஸில் இணைந்து விட்டார். சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் (ரீ.ஏ) எக்கட்சியிலுள்ளார் என்பது இதுவரைக்கும் தெரியாது. ஆனால் தேசிய காங்கிரஸில் இல்லை என்பது மட்டும் உண்மை. இவ்வாறான நிலையிலே கட்சியின் மாநாடும் நடைபெறவுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் மக்களைக் கைவிடவில்லை என்பதை தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா முன்னர் ஒருதடவையும் நிரூபித்துள்ளார்.
உண்மையில் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய அதாஉல்லா சம்மாந்துறைக்கு வாக்குறுதி வழங்கியது போல அன்வர் இஸ்மாயிலை தேசிய பட்டியலூடாக எம்.பியாக்கினார். இதே காய்நகர்த்தலுக்குத்தான் தன்னை இம்முறை (2015) வெற்றியீட்ட வைக்குமாறு கோரியதுடன் முஸ்லிம் காங்கிரஸின் முனாபிக் (துரோகி) தனமான சிந்தனைகள் அட்டாளைச்சேனை மக்களின் எம்.பிக் கனவை ஒருபோதும் நனவாக்கிவிடாது என்று அதாஉல்லா ஆணித்தரமாகச் சொல்லி வந்தார். எவ்வாறாயினும் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் அதாஉல்லாவின் ஆசைகளின் வெளிப்பாடுகளே இம்மாநாட்டு ஏற்பாடுகள் என்பதையும் பலர் பேசுகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் தனக்குள்ள மக்கள் பலத்தை காட்டுவது தேர்தலின் பின்னர் அதை நிரூபித்து தனக்கு தேசியப்பட்டியலில் எம்.பி பதவியொன்றைக் கோருவது இதுவே தேசிய காங்கிரஸ் மீண்டும் பிழைப்பதற்கு இப்போதுள்ள வழி. தேசியப்பட்டியல் எல்லாம் வழங்கப்பட்ட பின்னர் எப்படி தேசியப்பட்டியல் அதாஉல்லாவுக்கு கிடைக்குமென்று வாசகர்கள் சிந்திக்கலாம். இதோ அதற்கான காய்நகர்த்தல்களை தெளிவூட்டுகின்றோம்.
உள்ளூராட்சி சபையில் ஐ.ம.சு.மு. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டாலே அதிகளவான சபைகளைக் கைப்பற்றலாம். ஐ.ம.சு.மு.விலுள்ள இனவாதக் கட்சிகளை ஓரங்கட்டிய பின்னர் ஐ.ம.சு.மு.வுக்கு முஸ்லிம் பிரதேசங்களில் வரவேற்பு கிடைத்தாலும் மஹிந்தவை ஓரங்கட்டினால் சிங்களப் பிரதேசங்களிலுள்ள அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை ஐ.ம.சு.மு. இழக்க நேரிடும். மஹிந்த, மைத்திரி அணி என ஐ.ம.சு.மு. உடைந்தால் சிங்களப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களை ஐ.தே.க. இலகுவாக கைப்பற்ற இடமுண்டு.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மஹிந்த அணி ஐ.ம.சு.மு. தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஐந்தை தங்களுக்கு தரவேண்டும் எனக் கோருகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வுக்கு கிடைத்த 95 எம்.பிக்களும் மஹிந்தவின் பெயர், மவுசுக்காக கிடைத்ததென்பதே உண்மை.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துள்ள மைத்திரி எவ்வாறேனும் மஹிந்த அணியின் கோரிக்கைக்கு உடன்படலாம். இந்நிலை ஏற்படின் ஐந்து தேசியப்பட்டியல்களையும் மஹிந்த அணி பங்கு பிரிக்கும். இதிலொன்று தேசிய காங்கிரஸ் தலைமைக்கு வழங்கப்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த அரசியல் களத்தை கருத்திற் கொண்டுதான் தேசிய காங்கிரஸ் காய்நகர்த்துவதாக தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட எம்.பிக்களில் யாரை நீக்குவதென்ற தலையிடி மைத்திரி அணிக்கு உள்ளது. எந்த அணி பலமடைகிறதோ அதில் இணைவது பொருத்தமென்றும் தேசிய காங்கிரஸ் சிந்திக்கிறது. இதனால் தான் மைத்திரி, சந்திரிகா உள்ளிட்ட சு.க. தலைவர்களை மாநாட்டிற்கு அழைத்துள்ள தேசிய காங்கிரஸ் மஹிந்தவை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து பெயரை பாழடையச் செய்யும் எண்ணமில்லை என்பதால் தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு மஹிந்தவை அதாஉல்லா அழைக்கவில்லை போலும்.
இதற்கிடையில் அடிபட்ட பாம்பு மீண்டும் காற்றுக்குடித்து உயிர் வாழ முனைகிறதே என்ற கவலையும் எரிச்சலும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும். இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை பொருட்படுத்தாத சில முஸ்லிம் தலைமைகள் இரகசியமாக எதை செய்கிறதோ தெரியவில்லை.
0 comments:
Post a Comment