இருபதிற்கும் குறைவான மைக்ரோன்கள்
'இருபதிற்கும் குறைவான மைக்ரோன்களைக் கொண்ட பொலித்தீன்களுக்கான தடை நேற்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய 20ற்கும் குறைவான மைக்ரோன்களைக் கொண்ட பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் தடைசெய்யப்படுகின்றன.
பொலித்தீன் பாவனையால் சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்பைக் கருத்தில் கொண்டே 20ற்கும் குறைவான மைக்ரோன்களைக் கொண்ட பொலித்தீன்களை தடைசெய்யத் தீர்மானித்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேவிர்வின் தர்மசிறி தெரிவித்தார்.
இருந்தாலும் பொலித்தீன் பாவனையை முழுமையாக தடைசெய்ய எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுமுதல் 20ற்கும் குறைவான மைக்ரோன்களைக் கொண்ட பொலித்தீன்களை உற்பத்தி செய்யும் மற்றும் விநியோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
இந்தப் பொலித்தீன் தடையைக் கண்காணிப்பதற்கும், சோதனைகளை நடத்துவதற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தடையை மீறி செயற்படும் நபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் அவர்களிடமிருந்து 10,000 ரூபா தண்டப்பணத்தை அறவிடுவதற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை சட்டத்தின் கீழ் பொலித்தீன் தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
சுற்றாடல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதிலும் 20 மில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இதனால் சுற்றாடலுக்குப் பாரிய பாதிப்பு ஏற்படுவதாக சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.
0 comments:
Post a Comment