சமூகங்களைத் தூண்டிவிட சிலர் சதி
நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அளித்த வாக்குறுதி, உறுதிமொழிகளை கவனத்தில் கொள்ளாமல் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தை எதிர்த்து சில அரசியல் சக்திகள் கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை பெரும் கவலை அளிப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எச். எச். எம். ஹரீஸ் விசனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனையில் தமிழ் புத்திஜீவிகள், விவசாயப் பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது எந்தவொரு சமூகத்துக்கும் துரோகமிழைக்கப்படமாட்டாது எனவும் கல்முனை அபிவிருத்தித் திட்டம் பிரதேசத்தின் சகல மக்களதும் நலன்சார்ந்ததாகவே முன்னெடுக்கப்படுமென உத்தரவாதமளித்திருந்தார்.
இந்த நிலையிலும் கூட அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றையதினம் (28)ஆர்ப்பாட்டம் நடத்தியமை தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்கச் செய்யும் உள்நோக்கம் கொண்டதெனவும் பிரதியமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது இப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இருப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.
கல்முனையில் விவசாயக் காணிகள் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கவே செய்கின்றது. அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது இரு தரப்பினரதும் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும். எந்தவொரு சமூகத்துக்கும் பாதகமாகச் செயற்படப் போவதில்லை. யாருக்கும் துரோகமிழைக்கப்படவும் மாட்டாது என்பதை நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆணித்தரமாக வலியுறுத்தி உறுதிமொழியளித்திருக்கின்றார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கல்முனை பிரதேச தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவே நான் சந்தேகப்படுகின்றேன். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த ரெலோ அமைப்பின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தனது மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களை லொறிகளில் ஏற்றிவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த விவகாரத்துக்கு இன ரீதியில் அரசியல் சாயம் பூசி கல்முனை வாழ் தமிழ் – முஸ்லிம் சமூகங்களை கூறுபோடும் நாடகத்தை மேடையேற்றும் ஒரு முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
கல்முனை பிரதேசத்தில் விவசாயக் காணிகள் நாலாயிரம் ஏக்கருக்கும் அதிகமாகவே உள்ளது. இந்த நகர அபிவிருத்திக்காக எடுக்கப்படப் போவது வெறும் 200 ஏக்கர் காணிகளே ஆகும். ஆனால் தமிழ் சமூகங்களின் காணிகள் பறிக்கப்படப் போவதாக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு கல்முனை நகர அபிவிருத்தியை தடுக்கும் முயற்சியையே இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதை பொறாமைக் கண்களுடன் இவர்கள் நோக்குகின்றனர். கல்முனை அபிவிருத்திச் செயற்பாடுகளில் வெளி மாவட்ட அரசியல் சக்திகள் தலையிட்டு குழப்பும் ஒரு முயற்சியை இவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர்.
கல்முனையில் பாரம்பரியமாக பிறந்து வாழும் மக்களில் எவரும் கல்முனை நகர் அபிவிருத்தியடைவதை நிராகரிக்கவில்லை. இப்பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டுமென்பதில் இவர்களுக்கிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சுனாமி பேரழிவுக்குப் பின்னர் கரையோர மாவட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, , கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட பல மாவட்டங்களிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் அர்த்தமற்ற விதத்தில் பொறாமைகொண்ட சிலர் கல்முனைத் திட்டத்தை முறியடிக்க முனைகின்றனர். இது பெரும் கவலை தரக்கூடியதொன்றாகும்.
சுனாமியின் பின்னர் சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை போன்ற இடங்களில் விவசாயக் காணிகள் நிரப்பப்பட்டு வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இந்தச் சந்தர்ப்பத்திலும் சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை.
கல்முனை நகரம் அபிவிருத்தியடையக் கூடாது என்ற காழ்ப்புணர்வுகளே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களின் திட்டமாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்புள்ள அரசியல் சக்திகள் பங்கேற்றுள்ளமை தான் வேதனையளிக்கின்றது.
மக்களை தூண்டிவிடுவதை விட சந்தேகங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி அதில் அரசியல் குளிர்காய முற்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதாகவும் பிரதியமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment