ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான CCTV காட்சிகளை அமெரிக்காவின் FBI, சீனாவின் MPS இற்கு அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட்லாண்ட் யார்ட் (Scotland Yard) நீதிமன்ற ஆராய்ச்சி சம்பந்தமான ஆய்வுகூடத்திற்கு அனுப்புவது சிறந்தது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் தாஜுதீன் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05) எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த CCTV தொகுப்பில், சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றின் நடாமாட்டம் காணப்பட்டபோதிலும் அக்காட்சிகளின் தெளிவின்மை காரணமாகவும், தங்களிடமுள்ள தொழில்நுட்பம் வரையறைக்குட்பட்டதாக காணப்படுவதாலும், அவ்வாகனத்தின் இலக்கத்தை அவதானிப்பதில் சிக்கலுள்ளதாக, இது குறித்து பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையில் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், நாராஹேன்பிட்ட மற்றும் கிருளப்பனை ஆகிய பிரதேசத்தில் பெறப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் 04 இனை தாங்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே குறித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அவதானித்ததாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பாதையின் வெளிச்சம், வாகனத்தின் வெளிச்சம் போன்றவற்றாலும், இரவு வேளையில் குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், வாகன இலக்கத் தகட்டை தெளிவாக அவதானிக்க முடியவில்லை என, பல்கலைக்கழகத்தினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
WP-KU 6543 எனும் சந்தேகத்திற்கிடமான வாகனத்தில், நபர்கள் இருப்பதனை அவதானிக்க முடியவில்லை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த CCTV காட்சிகளை மேலும் ஆராய்ந்து, தெளிவான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள, அமெரிக்காவின் FBI, சீனாவின் MPS இற்கு அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட்லாண்ட் யார்ட் (Scotland Yard) நீதிமன்ற ஆராய்ச்சி சம்பந்தமான ஆய்வுகூடத்திற்கு அனுப்புவது சிறந்தது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த காட்சிகள் தொடர்பில், வெளிநாட்டு வல்லுனர்களின் உதவிகள் தேவைப்படின், அதனையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாக, கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு எதிர்வரும் நாளைமறுதினம் (07) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
0 comments:
Post a Comment