கல்முனை மாநகர சபைக்கான பொதுமக்களின் சோலை வரி 8 கோடி ரூபா நிலுவை
கல்முனை மாநகர சபைக்கு பொது மக்களினால் செலுத்தப்பட வேண்டிய சோலை வரி, எட்டுக் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை நிலுவையாக இருந்து வருகிறது என மாநகர சபை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுநலப் பணிகளை முன்னெடுப்பதில் மாநகர சபை பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இது தொடர்பில் மக்களை அறிவுறுத்தி கல்முனை மாநகர சபை சுகாதாரத் திணைக்களம் விநியோகித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த வருடமும் அதற்கு முன்னரும் வரியிறுப்பாளர்களான தங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரிகள் செலுத்தப்படாததன் காரணமாக மாநகர சபை தங்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதில் பாரிய சிரமங்கள் எதிர்கொள்கின்றது.
குறிப்பாக தங்களது வதிவிடங்களிலிருந்து குப்பைகளை அகற்றுதல், வீதி விளக்குகளை பராமரித்தல், வீதி வடிகான்களை பராமரித்தல் போன்ற அன்றாடம் ஆற்ற வேண்டிய கருமங்களுக்காக அவர்களினால் செலுத்தப்பட வேண்டிய சோலை வரியானது பல வருட காலமாக செலுத்தப்படாமல் எட்டு கோடிக்கும் மேற்பட்ட தொகை நிலுவையாகவுள்ளது. இதனால், குப்பைகளை அகற்றுவதற்குரிய வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்யவோ அல்லது இருக்கின்ற வாகனங்களை பழுதுபார்ப்பதற்கோ போதிய நிதி இல்லாமல் பாரிய சிரமத்தினை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மேலும், மாதாந்தம் 40 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை, குப்பைகளை அகற்ற செலவிட வேண்டியுள்ளது. இந்நிதியானது பொது மக்களினால் செலுத்தப்படுகின்ற சோலை வரியிலிருந்தே பெறப்பட வேண்டியுள்ளது. ஆகையினால் தங்களினால் செலுத்தப்பட வேண்டிய சோலைவரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி, அதற்காக வழங்கப்படும் பற்றுச்சீட்டுடன் ஸ்ரிக்கர் ஒன்றையும் பெற்று தங்களது வீடுகளில் ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்காலத்தில் இவ்வாறு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வீடுகளிலிருந்து மாத்திரமே குப்பைகள் அகற்றப்படக்கூடிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த பிரசுரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment