சீனாவில் 33 கட்டடங்களை தாக்கிய நிலச்சரிவால் காணாமல்போன பலரையும் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு நகரான ஷென்சனில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கிய ஏழு பேர் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டதோடு மேலும் 91 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் இருந்து சுமார் 900 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நகர் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இதன்போது 380,000 சதுர மீற்றர் பகுதி சேற்று மண்ணால் 10 மீற்றர் அளவுக்கு (32 அடி) புதையுண்டதாக அந்த நகரின் அவசரகால முகாமைத்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பாரிய அளவிலான மண் மற்றும் கட்டுமான கழிவுகளின் ஸ்திரமற்ற நிலையாலேயே இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட மண், 20 ஆயிரம் சதுர அடி பரப்பில், 100 மீற்றர் உயரத்துக்கு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியிலேயே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment