ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நப்லுௗஸ் நகரில் இஸ்ரேல் வீரர் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த இஸ்ரேலிய வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய நிலையிலேயே அந்த இரு பலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரின் துப்பாக்கி குண்டு தவறுதலாக சக வீரர் ஒருவர் மீதும் பாய்ந்து காயம் ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது அந்த வீரரின் காலிலேயே காயம் ஏற்பட்டுள்ளது. மற்றைய வீரரின் முகத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
17 வயது முஹமது ரபீக் ஹுஸைன் சபானா மற்றும் 23 வயது முஹமது அப்துல் காதிர் சபானா ஆகிய இரு பலஸ்தீனருமே கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றிருக்கும் ஹவ்வாரா என்ற பலஸ்தீன பகுதிக்கு அருகில் இருக்கும் இஸ்ரேலிய சோதனைச்சாடி அதிகம் பதற்றம் கொண்ட பிரதேசமாக இருந்து வருகிறது.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் சராசரியாக நாளாந்தம் இடம்பெற்று வருகிறது. கடந்த வாரத்தில் மாத்திரம் 12 பலஸ்தீனர்கள் மற்றும் 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதில் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினருடனான மோதலின்போதே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். ஏனையோர் தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் கொல்லப்பட்டவர்களாவர்.
இவ்வாறான அண்மைய தாக்குதல்கள் எந்தவொரு பலஸ்தீன அமைப்பினதும் ஒருங்கிணைப்பும் இன்றி தனித்தனி வன்முறைகளாக இடம்பெற்று வருகின்றன.
அண்மைய வன்முறைகள் மற்றும் பலஸ்தீன எழுச்சி போராட்டங்கள் குறித்து ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார்.
0 comments:
Post a Comment